சனி, 24 ஜூலை, 2010

ஏழை மாணவிக்கு படிப்பதற்கு உதவுங்கள்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏழை மாணவி உயர் கல்வி உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். அவரது மனைவி மாரி. அவருக்கு வீரசக்தி என்ற மகனும், விஜயசக்தி (17) என்ற மகளும் உள்ளனர். அரசின் இலவச தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் வீரசக்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
விஜயசக்தி காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 500க்கு 449 மதிப்பெண் பெற்றார். விஜயசக்தி அதிக மதிப்பெண் பெற்றதால் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திருமால்முருகன் ப்ளஸ் 2 வகுப்பில் இரண்டாண்டு இலவச கல்வியில் சேர்த்தார்.தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,200க்கு 1,058 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்துவ கட்-ஆஃப் 182.50. அவருக்கு மருத்துவ ரேங்க் பட்டியலில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு கிடைத்துள்ளது. நர்சிங் படிப்புக்கு இடம் இலவசமாக கிடைத்தாலும் படிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். தனக்கு கல்வி உதவிகள் வழங்கினால், மேலும் தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என உதவிகளை எதிர்பார்க்கிறார். அவருக்கு படிப்பு உதவித்தொகை வழங்க விரும்புவோர், "விஜயசக்தி, த/பெ. சென்னகிருஷ்ணன், காரப்பட்டு அஞ்சல், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


- ஹேமாத்ரி, சென்னை.

வெள்ளி, 23 ஜூலை, 2010

சென்னையிலிருந்து அமர்நாத் சென்ற பக்தர்கள்...























அமர்நாத் பனிலிங்க தரிசனம்


ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், 2 லட்சத்து 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியில், இமயமலை மீது, 3 ஆயிரத்து 888 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கான பனிலிங்க யாத்திரை, கடந்த 30ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமர்நாத் யாத்திரை, அமைதியாகவும், எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. குகையில் உள்ள இயற்கையான லிங்கத்தை, இன்றுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். ஜம்முவில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்களிலிருந்து, 10 ஆயிரத்து 36 பேர், தரிசனத்துக்காக புறப்பட்டு விட்டனர்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆயிரத்து 477 ஆண்கள், 603 பெண்கள், 54 குழந்தைகள், உள்ளிட்ட 2 ஆயிரத்து 358 பேர், கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியில், அமர்நாத் லிங்கத்தை தரிசிப்பதற்காக, ஜம்முவில் உள்ள கீழ் முகாமுக்கு பாதுகாப்புடன் புறப்பட்டுவிட்டதாக, மாநில போலீஸார் கூறியுள்ளனர்.