வெள்ளி, 18 மார்ச், 2016

கல்யாண வைபோகம் சிறுவாபுரியில் கோலாகலம்

            


திருமண வயது வந்தும், தங்கள் குழந்தைகளுக்கு இன்னும் திருமண கைகூடவில்லையே என கலங்கிநிற்கும் பெற்றோர்களும், திருமண வயது வந்த பெண்களும், ஆண்களும், வழிபட வேண்டிய தலம் சென்னை அருகே உள்ளது. சிறுவாபுரி என்று அழைக்கப்படும் இந்த தலம்,சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறுவாபுரி  ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி  கோவில்  என்று அழைக்கப்படும் இத்  தலம், அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றறுள்ளது. இங்கு மணக்கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்த நிலையில், வள்ளி மணவாள பெருமானாக காட்சி அளிக்கின்றனர்.
பூச நட்சத்திரத்தில் இந்த  வள்ளி மணவாள பெருமானை  வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருமண வயது வந்த ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்றால் திருமணம் விரைவில் நிறைவேறும். திருமணத் தடை ஏற்பட்டாலோ, பல ஆண்டுகளாக திருமணம் பேச்சு எடுத்து, திருமணம் தட்டி தட்டி போனாலோ,  சிறுவாபுரிக்கு வந்து  முருகனை மனம் உருகி நாடி வந்தால் கைமேல் நல்ல பலன் கிடைக்கும். இது பிராத்தனை தலம், பரிகார தலமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இங்கு தரிசனம் செய்தாலே ஜெயம் உண்டாகும்.
திருமணம் நடக்க வேண்டிய பெண்கள் ஆறுவாரமும் தவறாமல் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனை செய்பவர்கள் வள்ளி நாயகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைப் பொருள்களுடன் மரகத விநாயகர் வள்ளி மணவாளப் பெருமான் அண்ணைமலையார், உண்ணாமுலையார், ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் முருகன் சந்நிதியில் தரும் மாலையை திருமணமாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தைச் சுற்றி வந்த பிறகு அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடக்கும் வரையில் பாதுகாக்க வேண்டும். இதனைத் தவிர வீடு, பிள்ளைப்பேறு உடலில் உள்ள நோய், வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த முருகனை ஆறுவாரம் தொடர்ந்து வழிபட்டால் நாம் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மற்ற அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.

6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக, சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில்  வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவம் நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர், சிறுவாபுரியில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் வழங்கி கூட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவினர், ஆறாம் ஆண்டாக கடந்த  06.09.2015 (ஞாயிற்றுக்கிழமை)  வள்ளி மணவாள பெருமான் கல்யாண மகோற்சவத்தை சிறப்பாக நடத்தினர்.  பிரார்த்தøனையாளர்களுக்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டி, இந்த வைபவத்தை எவ்வித கட்டணம் வசூலிக்காமல், அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்தினர்.

 காலை 5.00 மணி முதலே திருமணம் நிறைவேற வேண்டி பிரார்த்தனைக்கு பக்தர்கள் வர ஆரம்பித்தனர். வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்ற அனைவருடை பெயர் பதிவு செய்யப்பட்டு, நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. அத்துடன் முருகனின் வண்ணப்படம் அடங்கிய பைல் மற்றும் குடிநீர் பாட்டீல், குளிர்பானம், தினை உருண்டை, லட்டு அடங்கிய பை கொடுக்கப்பட்டது.
 திருமண விரைவில் கைகூட வேண்டி பிரார்த்தனைக்கு வந்த  ஆண்கள், பெண்கள்  தனித்தனியாக  கோவிலையொட்டியுள்ள திருமண மண்டபத்தில் அமரவைக்கப்பட்டனர். சுமார், 900 பேர் இந்த மஹோற்சவத்தில் பங்கேற்றனர்.
காலை 8.00 மணிக்கு காஞ்சி காமகோடி பீட, ஆஸ்தான தவில் வித்வான் டி.ஆர்.லோகநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் மஹோற்சவம் துவங்கியது. 9.00 மணிக்கு வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
காலை 10.00 மணிக்கு முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நடந்தது.
திருமணம் உற்சவத்தில் இருந்த வள்ளி மணவாள பெருமானுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 10.40 மணியளவில் வள்ளி மணவாள பெருமானுக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் முழுக்க திருக்கல்யாண மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்த பக்தர்கள், ஒரு நிமிடம் கண்ணை மூடி, அன்றைய நிகழ்வுகளை நினைத்தபடி, ‘திருமண கைகூடும்’ என்று குரல் எழுப்பினர். அப்போது பின்னணியில் ‘டும் டும்’ என மேளவாத்தியம் முழங்கியது. தொடர்ந்து  ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்பட்டது. மேலும், மஹோற்சவத்தில்  மணமகன்,மணமகள் வீட்டார்  சார்பில் அமர்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று உறுப்பினர்கள்,  பிரார்த்தனையாளர்களுக்கு விட்டு கொடுத்தனர். இதை குலுக்கல் முறையிலதேர்ந்தெடுத்து, பெற்றோருடன் வந்திருந்த ஒரு பெண் , மஹோற்சவ மேடையில் அமரவைக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்றது.
கல்யாண மகோற்சவம் முடிந்ததும் வள்ளியும், முருகபெருமானும் சிவவாத்தியம் முழங்க, கோவில் பிரகாரத்தை சுற்றி, 6 முறை வலம் வந்தனர். அப்போது திருமண பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ’வள்ளி மணவாளா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வலம்வந்தனர்.
திருமண பிரார்த்தனைக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், அவருடன் வந்த பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன், பிரசாத பையும், மரக்கன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடிய தம்பதியர்கள், மஹோற்சவத்திற்கு முதல் நாள்,  05.09.2015 அன்று மாலை 6 மணிக்கு சீர்வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, நன்றி செலுத்தினர். பின்பு, அவர்களுக்கு  குழுவினர் சார்பில் பரிசும், விருந்தும் அளிக்கப்பட்டது.





கோவிலின் சிறப்பு
அருணகிரிநாதரின்  திருப்புகழில்,  இந்த தலத்தை பற்றி, நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களில்ச் சிறப்பாக பாடியுள்ளார்.8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு “சீதளவாரிஜ பாதா நமோ நம:” என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

- கார்த்திகேயன்

ஞாயிறு, 6 மார்ச், 2016

மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?


மாசி மாதம், 24-ம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் (மார்ச்-7) மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான்.
அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது. சரி, அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை...

முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல் ஜாமத்தில் (மாலை 6 முதல் 9 மணி வரை):
ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந் தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம் (அளவு-1:2:3:1:1). அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும். 

அதன்பின் மறு நாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடித்துவிட்டு நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன் பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள்...

கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம். சிவராத்திரி (வைகுண்ட ஏகாதசியும்தான்) அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு. தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கவோ வேண் டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம்; அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி தியானிக்கலாம்.

திருவண்ணாமலை கிரிவலம்


திருவண்ணாமலை கிரிவலம்


திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [வேலூர்]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால் பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

இந்திரலிங்கம்


கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது  இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

அக்னிலிங்கம்


இரண்டாவது லிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

யமலிங்கம்


மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

நிருதி லிங்கம்




நான்காவதாக உள்ள இந்த லிங்கம் இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

வருண லிங்கம்


ஐந்தாவதாக உள்ள இந்த லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

வாயு லிங்கம்


ஆறாவதாக உள்ள இந்த லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

குபேர லிங்கம்


ஏழாவது இந்த லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

ஈசானிய லிங்கம்


கடைசி லிங்கம்.  வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.