வெள்ளி, 18 மார்ச், 2016

கல்யாண வைபோகம் சிறுவாபுரியில் கோலாகலம்

            


திருமண வயது வந்தும், தங்கள் குழந்தைகளுக்கு இன்னும் திருமண கைகூடவில்லையே என கலங்கிநிற்கும் பெற்றோர்களும், திருமண வயது வந்த பெண்களும், ஆண்களும், வழிபட வேண்டிய தலம் சென்னை அருகே உள்ளது. சிறுவாபுரி என்று அழைக்கப்படும் இந்த தலம்,சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறுவாபுரி  ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி  கோவில்  என்று அழைக்கப்படும் இத்  தலம், அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றறுள்ளது. இங்கு மணக்கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்த நிலையில், வள்ளி மணவாள பெருமானாக காட்சி அளிக்கின்றனர்.
பூச நட்சத்திரத்தில் இந்த  வள்ளி மணவாள பெருமானை  வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருமண வயது வந்த ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்றால் திருமணம் விரைவில் நிறைவேறும். திருமணத் தடை ஏற்பட்டாலோ, பல ஆண்டுகளாக திருமணம் பேச்சு எடுத்து, திருமணம் தட்டி தட்டி போனாலோ,  சிறுவாபுரிக்கு வந்து  முருகனை மனம் உருகி நாடி வந்தால் கைமேல் நல்ல பலன் கிடைக்கும். இது பிராத்தனை தலம், பரிகார தலமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இங்கு தரிசனம் செய்தாலே ஜெயம் உண்டாகும்.
திருமணம் நடக்க வேண்டிய பெண்கள் ஆறுவாரமும் தவறாமல் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். பிரார்த்தனை செய்பவர்கள் வள்ளி நாயகனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைப் பொருள்களுடன் மரகத விநாயகர் வள்ளி மணவாளப் பெருமான் அண்ணைமலையார், உண்ணாமுலையார், ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
மேலும் முருகன் சந்நிதியில் தரும் மாலையை திருமணமாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தைச் சுற்றி வந்த பிறகு அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடக்கும் வரையில் பாதுகாக்க வேண்டும். இதனைத் தவிர வீடு, பிள்ளைப்பேறு உடலில் உள்ள நோய், வாழ்வில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த முருகனை ஆறுவாரம் தொடர்ந்து வழிபட்டால் நாம் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மற்ற அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.

6 வாரம் தொடர்ந்து வர முடியாமல் சிரமப்படுபவர்களுக்காக, சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழுவினர் ஆண்டுதோறும் சிறுவாபுரியில்  வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவம் நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர், சிறுவாபுரியில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் வழங்கி கூட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவினர், ஆறாம் ஆண்டாக கடந்த  06.09.2015 (ஞாயிற்றுக்கிழமை)  வள்ளி மணவாள பெருமான் கல்யாண மகோற்சவத்தை சிறப்பாக நடத்தினர்.  பிரார்த்தøனையாளர்களுக்கு விரைவில் திருமணம் கைகூட வேண்டி, இந்த வைபவத்தை எவ்வித கட்டணம் வசூலிக்காமல், அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் இலவசமாக நடத்தினர்.

 காலை 5.00 மணி முதலே திருமணம் நிறைவேற வேண்டி பிரார்த்தனைக்கு பக்தர்கள் வர ஆரம்பித்தனர். வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்ற அனைவருடை பெயர் பதிவு செய்யப்பட்டு, நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. அத்துடன் முருகனின் வண்ணப்படம் அடங்கிய பைல் மற்றும் குடிநீர் பாட்டீல், குளிர்பானம், தினை உருண்டை, லட்டு அடங்கிய பை கொடுக்கப்பட்டது.
 திருமண விரைவில் கைகூட வேண்டி பிரார்த்தனைக்கு வந்த  ஆண்கள், பெண்கள்  தனித்தனியாக  கோவிலையொட்டியுள்ள திருமண மண்டபத்தில் அமரவைக்கப்பட்டனர். சுமார், 900 பேர் இந்த மஹோற்சவத்தில் பங்கேற்றனர்.
காலை 8.00 மணிக்கு காஞ்சி காமகோடி பீட, ஆஸ்தான தவில் வித்வான் டி.ஆர்.லோகநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் மஹோற்சவம் துவங்கியது. 9.00 மணிக்கு வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
காலை 10.00 மணிக்கு முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நடந்தது.
திருமணம் உற்சவத்தில் இருந்த வள்ளி மணவாள பெருமானுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 10.40 மணியளவில் வள்ளி மணவாள பெருமானுக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் முழுக்க திருக்கல்யாண மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் அபிஷேகத்தையும், கல்யாணத்தையும் கண்டுகளித்து பிரார்த்தனை செய்த பக்தர்கள், ஒரு நிமிடம் கண்ணை மூடி, அன்றைய நிகழ்வுகளை நினைத்தபடி, ‘திருமண கைகூடும்’ என்று குரல் எழுப்பினர். அப்போது பின்னணியில் ‘டும் டும்’ என மேளவாத்தியம் முழங்கியது. தொடர்ந்து  ஆண்களுக்கு வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்பட்டது. மேலும், மஹோற்சவத்தில்  மணமகன்,மணமகள் வீட்டார்  சார்பில் அமர்வதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மூன்று உறுப்பினர்கள்,  பிரார்த்தனையாளர்களுக்கு விட்டு கொடுத்தனர். இதை குலுக்கல் முறையிலதேர்ந்தெடுத்து, பெற்றோருடன் வந்திருந்த ஒரு பெண் , மஹோற்சவ மேடையில் அமரவைக்கப்பட்டு சடங்குகள் நடைபெற்றது.
கல்யாண மகோற்சவம் முடிந்ததும் வள்ளியும், முருகபெருமானும் சிவவாத்தியம் முழங்க, கோவில் பிரகாரத்தை சுற்றி, 6 முறை வலம் வந்தனர். அப்போது திருமண பிரார்த்தனையாளர்கள் தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு ’வள்ளி மணவாளா போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வலம்வந்தனர்.
திருமண பிரார்த்தனைக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், அவருடன் வந்த பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன், பிரசாத பையும், மரக்கன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்று திருமணம் கைகூடிய தம்பதியர்கள், மஹோற்சவத்திற்கு முதல் நாள்,  05.09.2015 அன்று மாலை 6 மணிக்கு சீர்வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, நன்றி செலுத்தினர். பின்பு, அவர்களுக்கு  குழுவினர் சார்பில் பரிசும், விருந்தும் அளிக்கப்பட்டது.





கோவிலின் சிறப்பு
அருணகிரிநாதரின்  திருப்புகழில்,  இந்த தலத்தை பற்றி, நான்கு பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம். அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன. கண்டறியப்பட்ட 215 ஸ்தலங்களில் 35 ஸ்தலங்களில்ச் சிறப்பாக பாடியுள்ளார்.8 ஸ்தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 ஸ்தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார். மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு “சீதளவாரிஜ பாதா நமோ நம:” என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

- கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை: