சனி, 30 ஏப்ரல், 2016

மே 19ல் பார்ப்போம்

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர்.
அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர்.
ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர்.
நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது.
விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று தின்றது.
இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன் அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து தின்றது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத்தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான குள்ளநரியையும் கூட்டிவந்து ஆட்டினை அடித்து சாப்பிட ஆரம்பித்தன.
இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து, சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த ஓநாய் தன் குட்டி, அதனுடைய குட்டிகள் என எல்லாம் சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவசாயிகளையும் கடித்துக்குதற ஆரம்பித்தன.
ஓநாய்களே ஆட்டை எடுத்துக்கொண்டால் நாம் என்ன செய்வது என யேசித்த நரி தந்திரமாக ஒரு காரியம் செய்தது.
விவசாயிகளிடம் தாமக சென்று நான் திருந்தி விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்திவிட்டேன், எனக்கு என யாருமே இல்லை, நான் இங்கு பட்டியிலேயே இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி அடியுங்கள் என்றது.
இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன் பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத்தொடங்கினர்.
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்றபசியோடு காத்திருக்கும் ஓநாய்குடும்பம் ஒருபக்கம், உண்டு களைத்து ஓய்விலிருக்கும் நரியும், தோழியும் மறுபக்கம்.
என்ன செய்வான் விவசாயி மீண்டும் முட்டாள் தனமாக நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா?
அல்லது ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்போகிறானா? .
.
.
..
.
.
.
.
.
மே 19ல் பார்ப்போம்.

எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்...

அந்த பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும்.திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தார்.அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது.என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார்.பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்."உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது.உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது.அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது.உடனடியாக அதனை கொல்லுங்கள்....!"என்பதே அது.
நீதி:உங்களை சுற்றியுள்ள அனைவரும்,உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு



திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்.

பஸ் ரூட்: இத்திருத்தலம் செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாரீஸ் கார்னரிலிருந்து மாதவரம்- செங்குன்றம் வழியாக் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து எண்: T57, 58A & 58G

ஆலய நேரம்: காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.

மூலவர்      :  புஷ்பரதேஸ்வரர்
அம்மன்      :  சொர்ணாம்பிகை
ஊர்               :  ஞாயிறு
மாவட்டம் :  திருவள்ளூர்
தீர்த்தம்       :       சூரிய தீர்த்தம்
விருட்சம்   :      செந்தாமரை
அவதாரம்   :     சங்கிலி நாச்சியார்
முக்தி           :     கன்வ மகரிஷி

தல வரலாறு 
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட மன்னன், பார்வை இழந்தான். வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், 'புஷ்பரதேஸ்வரர்'' என்று பெயர் பெற்றார்.

சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

பல்லவ விநாயகர் 
விநாயகர் தலையில் கிரீடத்துடன்தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக, இவர் இவ்வாறு காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை 'பல்லவ விநாயகர்' என்றழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சிலை இருக்கிறது. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, யோக பட்டையுடன் காட்சி தருகிறார். கால பைரவர்,

சூரிய வழிபாடு
சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும்.

பரிகார பூஜைகள்: சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட கண் நோய் நீங்க பெறுகிறார்கள்.

விவாகத் தடை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்து வர விவாகத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
தொழில் சம்பந்தமான பிரச்சனை/சொத்துப் பிரச்சனை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, தயிர் சாத அபிஷேகம் செய்து வர தொழில் பிரச்சனை/சொத்துப் பிரச்சனை நீங்கப் பெறும்.

குழந்தைகளின் கல்வி மேம்பட: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, கோதுமை கேசரி அபிஷேகம் செய்து வர குழந்தைகளின் கல்வி மேம்படும்.
பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்க: பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செயும் விதமாக, இவர் இவ்வாறு இருப்பதாக ஐதீகம். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோயுள்ளவர்கள் இவருக்கு 6 வாரங்கள் 9 நெய் தீபம் ஏற்றி வழிபட பல் நோய் நீங்க பெறுவர்.