சனி, 4 ஆகஸ்ட், 2018

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் (கந்தக்கோட்டம்)

உற்சவர்                   :   முத்துக்குமாரர்
அம்மன்/தாயார்      :   வள்ளி, தெய்வானை
தல விருட்சம்         :  மகிழம்
தீர்த்தம்                     :   சரவணப் பொய்கை
ஆகமம்/பூஜை         :   குமார தந்திரம்
பழமை                       :  500 - 1000 வருடங்களுக்கு முன்


தல வரலாறு


இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் அருகில் உள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு உரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.  எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக்கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.


தல சிறப்பு: 


உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும். செல்வம் பெருகும் ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.


தல பெருமை:


சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துணைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.


பாடியவர்கள்:


சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள்.
பொதுத்தகவல்:
இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.


சிறப்பம்சம்:


உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார்.


திருவிழா:


தையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.


நேர்த்திக்கடன்:


பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள சித்தபுத்தி  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


கோயிலை எப்படி அடையலாம்:


சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.
ரயில் நிலையம் - சென்னை சென்ட்ரல்
தங்கும் வசதி: சென்னை


தொடர்பு முகவரி: 


அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,
கந்தகோட்டம் - 600 003.
சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை.
போன்: +91-44-25352192
மின்னஞ்சல்: smdevasthanam@gmail.com


திங்கள், 23 ஜூலை, 2018

பெசன்ட்நகர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்


மூலவர்                 : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு.
அம்மன்/தாயார் : தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
தல வரலாறு
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் ெசன்னையின் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக ஆனது. சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்குக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளதால் - தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் - பெருமாள் கோவிலைப் போலவே இக்கோவில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருைமயான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுறஅமைக்கப்பட்டுள்ளன.
தல சிறப்பு:
கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோவில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின்- சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
தல பெருமை:
அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோவில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
பொதுத்தகவல்:
ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது. குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
திருவிழா:
- புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி. ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
நேர்த்திக்கடன்:
வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில், அபிஷேக ஆராதனைகள், புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலை எப்படி அடையலாம்?
சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது.
ரயில் நிலையம் –- அடையாறு இந்திரா நகர் மெட்ரோ ரெயில் நிலையம்
தொடர்பு முகவரி: 
செயல் அலுவலர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்,
பெசன்ட் நகர் - – 600 090. சென்னை.
போன்: +91-–44–-2446 6777, 2491 7777
மின்னஞ்சல்: mahalakshmitemple015@gmail.com